Monday, 24 June 2019

Counselling

உளப்பகுப்பாய்வு கோட்பாடும் உளச்சிகிச்சை முறையும்

ஆஸ்திரியா நாட்டின் உளவியலாளரான சிக்மன் பிரொய்ட் முதன் முதலில் உளப்பகுப்புக் கொள்கையை அறிமுகம் செய்தார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கோட்பாடாகும்.  உளப்பகுப்பாய்வு முறையானது மனித நடத்தையிலும் ஆளுமையிலும்  மறைவான மூல இடங்களை பிரதானமாக ஆராய்கின்றது. பிரொய்ட் நனவு நிலையில் ஞாபகப்படுத்த முடியாத சம்பவங்களையும் பயங்களையும் போலியுறக்க நிலையில் நினைவுக்கு கொண்டு வர முடியுமென விளக்கினார். 
 பிரொய்ட் முதலில் நனவிலி நடத்தை,  நனவிலி ஊக்கல் ஆகிய கருத்துக்களை வெளியிட்டார். இவ்வகையில் பிராய்ட் மனதினை மூன்று  நிலைகளாக வகுத்தார். 
நனவு மனம்
முன் நனவு மனம் 
நனவிலி மனம்

பிரொய்ட் தனது ஆய்வுக்கு நனவிலி நிலையை பயன்படுத்தினார். எமது  வாழ்வில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் நனவு நிலை உள்ளத்துடன் தொடர்புபடுகின்றது. குழந்தை பருவத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் நனவிலி உள்ளத்தினுள் சேருகின்றன. இவற்றை ஞாபகப்படுத்த முடியாது, பயங்கள், சிக்கல்கள், எண்ணங்கள், ஆசைகள் என்பன நனவிலி மனதில் ஒடுக்கப்படுகின்றன. நனவிலியில் கடந்த கால அனுபவங்களில் நிறைவேறாத ஆசைகள், பயம், அறிவு பூர்வமற்ற விருப்புக்கள், வன்முறை ஊக்கிகள், ஒழுங்கீனமான நடத்தைகள் போன்றன நனவிலி மனதில் ஒடுக்கப்படுகின்றன.   ஒடுக்கப்பட்ட அனுபவங்களை அறியும் முறையே உளப்பகுப்பாய்வாகும். உளப்பகுப்பாய்வின் பிரதான பணியாக ஆலோசனை நாடியை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வர உதவுவதாகும். 
பிராய்டின் உளப்பகுப்பாய்வு சிகிச்சை முறை  இரண்டு குறிக்கோள்களைக் கொண்டது. 
1.நனவிலி நிலையிலுள்ளவற்றை நனவு நிலைக்கு கொண்டு வருதல். 
2. அகம் பலப்படுத்தப்படுதல். 
இவற்றின் மூலம் மனித நடத்தையானது  யதார்த்த நிலையில் தங்கியிருக்க முடியும். நனவிலி மனதின் உட்பகுதிகளை அறிவதற்கு உளப்பகுப்பாய்வும் உளச்சிகிச்சை  பல்வேறு முறைமைகளை உருவாக்கியுள்ளன.

உளச்சிகிச்சை என்பது உள ரீதியான பிரச்சினைகள், ஒழுங்கீனங்களை இனங் கண்டு  அவற்றிக்குச் சிகிச்சையளிப்பதனூடாக அதனைத் தவிர்த்து ஆளுமையில் விருத்தியை ஏற்படுத்த உதவும்  முறையாகும். உளச்சிகிச்சை முறை  பின்வரும் மூன்று  நோக்கங்களைப் பிரதானமாக கொண்டுள்ளன. 
1. உள ஒழுங்கீனங்களை அறிந்து கொள்ளல். 
2. உள ஒழுங்கீனங்களுக்குச் சிகிச்சையளித்தல்.
3. உள ஒழுங்கீனங்களைத் தவிர்ந்து கொள்வதற்கான ஆளுமையை வளர்த்தல். 

உள ரீதியான பிறழ்வுகளுக்கு நடைமுறையில் பல சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றை மூன்று கையில் வகைப்படுத்தலாம். தன்னரி சிகிச்சை, நடத்தை சிகிச்சை, உயிரி மருந்துச் சிகிச்சை போன்றனவாகும். 
    பிராய்டின் உளப்பகுப்பாய்வு அணுகுமுறையில் இரு பிரதான உளச்சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.  சுயாதீன இயைபு முறை மற்றும் கனவுப் பகுப்பாய்வும் முக்கியமானதாகும். சுயாதீன இயைபு முறை உளப்பகுப்பாய்வு சிகிச்சை முறையில் முக்கியமானதொன்றாகும். நனவிலி உள்ளத்தை அறிவதற்கான சிறந்த முறையாகும்.  நனவிலி மனதிலுள்ளவற்றை வெளிக்கொணரச் செய்து அதன் மூலம் நோய்க்கான காரணத்தை அறிவதற்கு பிராய்ட் இம்முறையை பயன்படுத்தினார்.    இம்முறை  மூலம் சுய வெளிப்பாடு மற்றும் ஆலோசனை நாடி தன்னை இன்னும் நன்றாக புரிந்து கொள்வதற்கான வழியாகும். இதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்தப் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியதாகயிருக்கும். 

பிரொய்ட் கனவுகள் பற்றிய கோட்பாட்டை 1900 ஆண்டு வெளியிட்டார். கனவு மனித நடத்தைகளில் ஒன்றாகும். அதாவது நனவிலி மனதில்  ஒடுக்கப்பட்ட நிறைவேறாத   ஆசைகளை  நிறைவேற்றுகின்ற வெற்றுத் தோற்றங்களே கனவாகும். அடக்கப்பட்ட ஒடுக்கங்களை  கனவாக வெளிப்படுத்துவதற்கு செறிவு, இடப்பெயர்வு, பிரதிபலிப்பு, மாற்றியமைப்பு போன்ற உத்திகளை பயன்படுத்துவதாக பிராய்ட் குறிப்பிட்டார். மேலும் முந்திய நாள் விட்டுவிட்ட உணர்ச்சிகள், சிந்தனைகள், எண்ணங்கள், நினைக்கக்கூடாது  என்று மனதில் அடக்கிவிட்டவை எல்லாம் கனவின் மூலமாக வெளிப்படுகின்றன. 

உளச்சிகிச்சை முயற்சிகள் ஆலோசனை நாடியின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதற்கு உதவுகிறது. எனவே உளச்சிகிச்சை முறையின் மூலம் பிரச்சினை  தீர்த்தலுக்கும் புதிய நடத்தைகள் கற்றுக் கொள்வதற்கும் மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. ஒருவரது ஆளுமையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவசியம் தேவை என நம்பப்படுகின்ற சுய விளக்கத்தை விருத்தி செய்து கொள்வதற்காகவும் கடந்த காலத்தை ஆழ்ந்து பரிசீலனை செய்யும் முயற்சியாகவும் காணப்படுகிறது. 

எம்.எஸ்.எப்.சபானா
கல்விப்பீடம்
கொழும்பு பல்கலைக்கழகம்.



உசாத்துணை
1. நௌபர்,யூ.எல்.எம்.” உளவியல் சார் உளவளத்துணை அணுகுமுறை” ,    IWTHI Trust,  கொழும்பு- 5
2. ஜமாஹிர் ,பீ. எம், (2002),  “பொது உளவியல் ஓர் அறிமுகம்”,  இலங்கை தென் கிழக்கு ஆய்வு மையம்.
3. www.noolaham.org



No comments:

Post a Comment